வேலூரில் புதிய உயர் சிறப்பு மருத்துவமனை தொடக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

0

வேலூரில் புதிய உயர் சிறப்பு மருத்துவமனை தொடக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

வேலூரில் ரூ.197.81 கோடி செலவில் அமைக்கப்பட்ட பென்ட்லேண்ட் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், மாவட்டம் முழுவதும் ரூ.7 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட 9 ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களையும் அவர் திறந்து வைத்தார்.

இந்த மருத்துவமனை, வேலூர் நகர மையத்தில் உள்ள பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது. இதன் கட்டுமானம் தரைதளத்துடன் 7 மாடிகள் கொண்டதாக அமைக்கப்பட்டு, 20,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது. இதில் 560 படுக்கைகள், 11 அறுவை சிகிச்சை அறைகள் மற்றும் உயர் சிகிச்சை பிரிவுகள் உட்பட பல்வேறு வசதிகள் உள்ளன. இந்த புதிய கட்டிடத்தை முதலமைச்சர் நேற்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும், ரூ.7 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 9 சுகாதார நிலையங்களை காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மற்றும் பல முக்கிய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல்வரின் மாவட்ட சுற்றுப்பயணம் மற்றும் மக்கள் சந்திப்பு

முதல்வர் ஸ்டாலின், 2 நாள் அரசு சுற்றுப்பயணமாக ரயிலில் வேலூர் வந்தார். காட்பாடி ரயில் நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நகரம் முழுவதும் திமுகவினர் மேடைகள் அமைத்து கலை நிகழ்ச்சிகள் மூலம் அவரை வரவேற்றனர். வேலூர் அண்ணா சாலையில் இசை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

வேனிலிருந்து இறங்கிய முதலமைச்சர், வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே “ரோடுஷோ”வில் கலந்துகொண்டு, சாலையோர மக்களை கைகாட்டி வரவேற்றார். பில்டர்பெட் சாலை சந்திப்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை சந்தித்து, அவர்களுக்கு சாக்லேட் வழங்கி மகிழ்ந்தார்.

திமுக பிரமுகர் வீட்டுக்கு ஆறுதல் செலுத்திய முதலமைச்சர்

முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் முகமது சகியின் சகோதரர் முகமது சாதிக் சாலை விபத்தில் இறந்திருந்தார். அவரது வீடு சென்ற முதலமைச்சர், குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்தார்.

திருட்டு முயற்சி பரபரப்பு

காட்பாடி தாராபடவேடு பகுதியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில், திமுகவினர் ஒருவரின் பாக்கெட்டில் இருந்த ரூ.500 நோட்டுக் கட்டை ஒருவர் திருட முயன்றார். அந்த நபர் பிடிபட்டபோது பணத்தை மக்கள் கூட்டத்தில் தூக்கி வீசியதால் சிலர் அதை எடுத்து சென்றனர். பின்னர் மீதமிருந்த பணம் உரிமையாளருக்கு வழங்கப்பட்டது. சந்தேக நபரிடம் பல செல்போன்கள் இருந்ததால், அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் திருடியிருக்க வாய்ப்பு உள்ளதா என விசாரணை நடக்கிறது.

Facebook Comments Box