மண்டபம் அருகே உள்ள சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் மீனவருக்கு ரூ.67,000 மின் கட்டண பில் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் ராமநாதபுரம் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள வேதாளை கிராமத்தில், அரசு வழங்கிய சுனாமி வீடில் வசித்து வரும் மீனவர் ஷேக் ஜமாலுதீன் என்பவருக்கு, இந்த மாத மின்சாரம் கட்டணம் ரூ.67 ஆயிரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது:
“வழக்கமாக என் வீட்டிற்கு ரூ.500 முதல் ரூ.600 வரை மின் கட்டணம் வரும். ஆனால் இந்த மாதம் ரூ.67 ஆயிரம் என பதிவானதை பார்த்ததும், என் குடும்பம் முழுவதும் அதிர்ச்சி அடைந்தோம். இதனை மண்டபம் மின்வாரிய உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் கேட்டபோது, சரியான விளக்கம் வழங்கப்படவில்லை.”
மேலும் அவர் கூறுகையில், “மின்வாரியத்தினர் உடனடியாக கட்டணம் செலுத்த வேண்டும் என அழுத்தம் தருகின்றனர். எனவே உண்மையான கட்டணத்தை தீர்மானிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன்” என்றார்.
இந்நிலையில், மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
“அவரது வீட்டு மின்மீட்டர் உள்ளிட்ட அமைப்புகளை ஆய்வு செய்து, தேவையான விசாரணைகள் முடிந்த பின் சரியான மின் கட்டணம் கணக்கிடப்படும்” எனத் தெரிவித்தனர்.