மேட்டூர் அணைஉபரியில் இருந்து காவிரி ஆற்றில் எந்த நேரத்திலும் 75,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படலாம் என்ற காரணத்தால், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மேட்டூர் அணையின் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் பிறப்பித்துள்ளார்.
கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து பாதுகாப்பு காரணமாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் விளைவாக கடந்த இரண்டு வாரங்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து பெருகியுள்ளது, இது மேட்டூர் அணைக்கும் அதிக நீர்வரத்தைக் கொண்டு வந்துள்ளது.
நேற்று மாலை விநாடிக்கு 60,740 கன அடி நீர் வந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு இந்த அளவு 73,452 கன அடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 4 மணிக்கு 114 அடி இருந்த நிலையில், இன்று அது 116.89 அடியாக உயர்ந்துள்ளது. டெல்டா பாசனத்துக்காக தற்போது விநாடிக்கு 26,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையின் நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் எனத் தெரிகிறது. இதனைக் குறித்து 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு (சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர்) அலர்ட் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், மதியம் 12 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 117.39 அடி எனவும், வருகிற நாட்களில் 50,000 முதல் 75,000 கன அடி உபரி நீர் எந்த நேரத்திலும் திறக்கப்படும் வாய்ப்பு இருப்பதால், காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். உடைமைகளை பாதுகாத்து, அனைத்து முன்னெச்சரிக்கைகளும் மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.