ஓரணியில் தமிழ்நாடு” என்ற இயக்கம், வெறும் உறுப்பினர் சேர்க்கை இயக்கமல்ல; தமிழர் மண், மொழி மற்றும் மானத்தைக் காக்க அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரு பெரும் பணியாகும்,” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று காணொலி கூட்டத்தில் வலியுறுத்தினார்.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஆளும் திமுக, தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில், “ஓரணியில் தமிழ்நாடு” என்ற தலைப்பில் வாக்குச்சாவடித் தோறும் 30% உறுப்பினர் சேர்க்கை செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
இந்த இயக்கத்தை ஜூலை 1ம் தேதி முதல் முதலமைச்சர் துவக்க உள்ளார். அடுத்த 45 நாட்களில், வீடுவீடாக சென்று, வாக்குச்சாவடி வாரியாக உறுப்பினர் சேர்க்கை மேற்கொள்ள நிர்வாகிகளுக்கு பணியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை மாவட்ட செயலாளர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சார்புக் கழகங்களின் நிர்வாகிகளுடன், “ஓரணியில் தமிழ்நாடு” திட்டம் குறித்த ஆலோசனை காணொலிக் கூட்டம் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் வீடுவீடாக சென்று அரசின் திட்டங்களைப் பகிர்வது குறித்தும், உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது பற்றியும் வழிகாட்டினார்.
முதல்வர் கூறியதாவது:
“இது வெறும் உறுப்பினர் சேர்க்கைக்கான முயற்சி அல்ல. தமிழின் அடையாளங்களான மண், மொழி, மானத்தைக் காக்க அனைவரையும் ஒருங்கிணைக்கும் இயக்கம்.
இதில் இணைய விருப்பமுள்ளோர் திமுகவிலும் இணைவார்கள். சாதி, மதம், கட்சி என எந்தப் பாகுபாடும் இல்லாமல், ஒவ்வொரு தமிழர் இல்லத்திலும் நாம் சென்று சேர வேண்டும்.
கீழடி போன்ற தொன்மை உண்மைகள் மறைக்கப்படுகின்றன. கல்வி நிதி குறைக்கப்படுகிறது, நீட் மூலம் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள், தொகுதி மறுவரையறை வழியே நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் தாக்கம் குறைக்கப்பட முயற்சி நடைபெறுகிறது.
இவற்றுக்கெல்லாம் எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும். நம்மை அடக்க முயற்சிகள் வந்தாலும், நாம் தீக்குச்சி அல்ல, உதயசூரியன். தமிழர் தன்மையை நிரூபிக்க ஓரணியில் ஒன்றாக நின்று செயல்படவேண்டும்.
ஜூலை 1ல் இயக்கம் தொடங்கும். ஜூலை 2ல் மாவட்டக் கூட்டங்கள், அதன்பின் வீடுவீடாக மக்களை சந்தித்தல், ஆகஸ்ட் 17க்குப் பிறகு நிறைவு விழா நடைபெறும்.”
முதல்வர், இயக்கத்துக்கான நான்கு நிலைகள் – பயிற்சி, துவக்கம், மக்கள் சந்திப்பு, முடிவு – குறித்து விளக்கினார். இரண்டு கோடி புதிய உறுப்பினர்களை இணைக்க உத்தரவிட்டார்.
நிர்வாகிகளுடன் சந்திப்பு:
‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் ஜூன் 13ம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை தொகுதி வாரியான ஆலோசனைகளில், நேற்று அந்தியூர், மேட்டுப்பாளையம், மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை முதல்வர் தனிப்பட்ட முறையில் சந்தித்து, தற்போதைய நிலை, வெற்றி வாய்ப்பு, பொறுப்பாளர்கள் செயல்பாடு குறித்து விவாதித்தார்.
இந்நிலையில், 21 தொகுதி நிர்வாகிகளைச் சந்தித்த அவர், செப்டம்பர் மாதத்துக்குள் 54 தொகுதிகளின் நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.