டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்கள் திருப்பிச் செறிவதற்காக தனி ஊழியர்களை நியமிக்க அரசு குழுவை அணுகலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பாட்டில்களை திரும்ப பெற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பாட்டில்கள் விற்பனையின் போது ரூ.10 சேமிப்புத் தொகையாக வசூலிக்கப்படுகிறது. பின்னர், காலியான பாட்டிலை மீள ஒப்படைத்தால், அந்த தொகை வாடிக்கையாளர்களுக்கு திருப்பி வழங்கப்படும். இந்த நடைமுறை தற்போது தமிழகமெங்கும் செயல்படுத்தப்படுகிறது.
இந்த பணிகளுக்கு தற்போது உள்ள டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்தாமல், தனி நபர்களை நியமிக்க வேண்டும் என்பதோடு, காலிப் பாட்டில்கள் சேமிக்க தனியான இடம் மற்றும் தேவையான வசதிகளை அமைக்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர் மாநில சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “ஊழியர்களின் குறைகளை கருத்தில் கொண்டு டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது; மனுதாரர் அந்த குழுவை தொடர்புகொள்ளலாம்” என்றார்.
இதனை பதிவுசெய்த நீதிபதி, “காலி பாட்டில்களை திருப்பிச் சேகரிக்கும் பணிக்காக தனி ஊழியர்களை நியமிப்பது குறித்து மனுதாரர் அரசு அமைத்துள்ள குழுவை அணுகலாம்” என கூறி வழக்கை முடித்தார்.