சென்னையில் கொடிக்கம்ப அகற்றம் குறைவாக உள்ளதற்கான காரணம் என்ன? – உயர்நீதிமன்றம் கேள்வி

0

சென்னையில் கொடிக்கம்ப அகற்றம் குறைவாக உள்ளதற்கான காரணம் என்ன? – உயர்நீதிமன்றம் கேள்வி

பொது இடங்களில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை நகரத்தில் இதுவரை 31% மட்டுமே அகற்றப்பட்டுள்ளதைக் குறித்தே சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தின் பொதுத்துறைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளாட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட அரசியல், சாதி, மத மற்றும் சங்கங்களைச் சேர்ந்த கொடிக்கம்பங்களை 2025 ஏப்ரல் 28க்குள் அகற்ற வேண்டும் என்ற உத்தரவை, மதுரை உயர் நீதிமன்ற அமர்வு கடந்த ஜனவரியில் பிறப்பித்தது.

இந்த வழக்கு இன்று (ஜூலை 2) நீதிபதி ஜி.கே. இளந்திரையன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு அமல்படுத்திய நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், 19 மாவட்டங்களில் 100% அகற்றம் நடைபெற்றதாகவும், மேலும் பல மாவட்டங்களில் 90%-க்கும் மேல் அகற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சென்னையில் மட்டும் 31% அகற்றம் மட்டுமே நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து நீதிபதி, “சென்னையில் உத்தரவு ஏன் முழுமையாக அமலாக்கப்படவில்லை? சாலையின் நடுவில் உள்ள தடுப்புகளில் கொடிக்கம்பங்களை நட அரசு எப்படி அனுமதிக்கிறது? இது மனித உயிர்களுக்கு ஆபத்தானது. உயிர்களின் மதிப்பை உணரமாட்டீர்களா?” என கடுமையாக கேள்வி எழுப்பினார்.

அரசு தரப்பில், முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய நான்கு வார அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்று, நீதிபதி ஜூலை 24 வரை அவகாசம் வழங்கி, நடவடிக்கைகளைத் தொடர்ந்து முழுமையாகச் செய்ய உத்தரவிட்டார். மேலும், உத்தரவுகள் பின்பற்றப்படாவிடில், தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்க நேரிடும் எனவும் எச்சரித்தார்.

Facebook Comments Box