சென்னையில் ரூ.19.44 கோடி செலவில் 13 கால்நடை காப்பகங்கள் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சாலைகளில் சுதந்திரமாக சுற்றி மக்களுக்கு மற்றும் போக்குவரத்துக்கு தொந்தரவு ஏற்படுத்தும் மாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு கால்நடை காப்பகம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக மூலதன நிதியின் கீழ் ரூ.19.44 கோடி ஒதுக்கப்பட்டு, தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதற்கிணங்க, கீழ்க்கண்ட இடங்களில் கால்நடை காப்பகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன:
- திருவொற்றியூர் – டி.பி.பி சாலை
- மணலி – செட்டிமேடு
- மாதவரம் – சிஎம்டிஏ லாரி முனையம்
- தண்டையார்பேட்டை – செல்லவாயல்
- ராயபுரம் – பேசின் பாலச் சாலை மற்றும் மூர்மார்க்கெட்
- அண்ணாநகர் – செனாய் நகர்
- தேனாம்பேட்டை – பீட்டர்ஸ் சாலை
- கோடம்பாக்கம் – காந்தி நகர்
- வளசரவாக்கம் – நொளம்பூர் யூனியன் சாலை
- ஆலந்தூர் – பி.வி.நகர்
- பெருங்குடி – வீரபாண்டிய கட்டபொம்மன் குறுக்குத் தெரு
- தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலை
- சோழிங்கநல்லூர் – பயோ சிஎன்ஜி நிலையம்
இந்த இடங்களில் கால்நடை காப்பகங்கள் கட்டும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
இதில், ராயபுரம் பேசின் பாலச் சாலையில் ரூ.1.30 கோடி செலவில் கட்டப்பட்ட கால்நடை காப்பகம் கடந்த ஜூன் 11-ம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்தக் கட்டடத்தில் கால்நடை மருத்துவர் அறை, பராமரிப்பாளர் அறை, கட்டுப்பாட்டு அறை, மருந்து வைப்பிடம் மற்றும் 12 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இங்கு ஒரே நேரத்தில் 240 கால்நடைகளை பராமரிக்க முடியும்.
மேலும், ஒரு கால்நடைக்கு தினசரி பராமரிப்பு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களிலும் கட்டும் பணிகள் விரைவில் முடிவடைய, அந்தக் கால்நடை காப்பகங்களும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.