மின்தடை காரணமாக மறுதேர்வு வேண்டும் என்ற மனு நிராகரிப்பு: உயர்நீதிமன்றம் தீர்ப்பு
நாடு முழுவதும் கடந்த மே 4-ம் தேதி நடத்தப்பட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வின் போது, சென்னையில் மின்தடை ஏற்பட்டதாகக் கூறி மறுதேர்வு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அன்று ஆவடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை காரணமாக மின்தடை ஏற்பட்டது. இதனால் தேர்வை சரியாக எழுத முடியவில்லை என தெரிவித்து, ஆவடி கேந்திரிய வித்யாலயா மையத்தில் தேர்வு எழுதிய 13 பேரும், பிற மையங்களைச் சேர்ந்த 3 பேரும் சேர்ந்து, மொத்தம் 16 மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் தேசிய தேர்வுகள் முகமை சார்பில், “மின்தடை ஏற்பட்டபோதிலும், தேர்வர்கள் பெரும்பாலான கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளனர். மறுதேர்வு நடத்தும் நிலை ஏற்பட்டால், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவர்” என குறிப்பிடப்பட்டது.
வழக்கை விசாரித்த தனி நீதிபதி, “சுமார் 22 லட்சம் பேர் நீட் தேர்வில் பங்கேற்ற நிலையில், மறுதேர்வு நடத்துவது சாத்தியமற்றது” என கூறி வழக்கை நிராகரித்தார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து 16 மாணவர்கள் மேல்முறையீடு செய்தனர். இது நீதிபதிகள் ஜெ. நிஷாபானு மற்றும் எம். ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்குவந்தது.
தேர்வுகள் முகமை மீண்டும் வாதிட்டதில், “தொடரப்பட்ட வழக்குகளில் மாணவர்கள் பெரும்பாலும் 100-க்கு மேற்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளனர். ஒருவரோ 179 கேள்விகளுக்கும் விடையளித்துள்ளார். எனவே மின்தடை பெரிதாக பாதிக்கவில்லை” என தெரிவித்தது.
இதை பரிசீலித்த நீதிபதிகள், “தேர்வில் முறைகேடு நடந்ததை உறுதிசெய்ய முடியாவிட்டால், மறுதேர்வுக்கு உத்தரவிட முடியாது. இது மற்ற மாணவர்களுக்கு அநியாயம் ஏற்படுத்தும். எனவே, தள்ளுபடி செய்த தனிநீதிபதியின் தீர்ப்பு மாற்றமின்றி கடைபிடிக்கப்படுகிறது” என்று தீர்ப்பு வழங்கி, மேல்முறையீட்டு மனுவை மறுத்தனர்.