சொந்த மாவட்டங்களில் பணியாற்றும் காவலர்களை மாற்றக் கோரி மனு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற உத்தரவு
தமிழக காவல்துறையில் சொந்த மாவட்டங்களில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அதிகாரிகளை பிற மாவட்டங்களுக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிக்கோட்டைச் சேர்ந்த ஓ. ஹோமர்லால் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், “தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பல முக்கிய கொலை வழக்குகளில் குற்றவாளிகள் பல ஆண்டுகளாக கைது செய்யப்படவில்லை. இதற்குக் காரணமாக, குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய நபர்களுடன் காவல் பணியில் உள்ளவர்கள் நெருங்கிய உறவுகள் அல்லது நண்பர்களாக இருப்பதே முக்கியத்துவம் பெறுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மனுவில் மேலும், “கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் நடந்த வனத்துறை அதிகாரி மற்றும் அவரது மனைவியின் இரட்டைக் கொலை வழக்கில், போலீசாரிடம் உள்ள துப்பாக்கிகளிலேயே கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் இருந்தன என்ற தகவலும் உள்ளது. ஆனால் இதுவரை முழுமையான விசாரணை நடைபெறவில்லை. உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில் உள்ளனர். காவல் நிலையங்களில் கட்டாய சமாதானங்கள் செய்யப்பட்டு, புகார் அளித்தவர்களுக்கே பொய் வழக்குகள் பதியப்படுகின்றன” என்றும் கூறியிருந்தார்.
இதோடு, 2000ஆம் ஆண்டு தேங்காய்பட்டினம் வெடிகுண்டு சம்பவத்தை விசாரித்த நீதிபதி முருகேசன் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையில் கீழ்த்தட்டிலிருந்து மேல்மட்டம் வரை அதே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் காவல்துறையில் தனிப்பட்ட விருப்பு-வெறுப்புகள், சுயநலச்சிந்தனைகள், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அதிகரிக்கின்றன. இது போலீஸ் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் பெரிதும் பாதிக்கிறது” என பரிந்துரைத்தது.
அதனைத் தொடர்ந்து, 2000ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழக அரசு, சொந்த மாவட்டங்களில் காவலர்கள் பணி செய்யக் கூடாது என்று அரசாணை வெளியிட்டது. ஆனால் இது நடைமுறையில் அமல்படுத்தப்படவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது குமரி மாவட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள், இதே மாவட்டத்தில் சார்பு ஆய்வாளர்களாக பணி தொடங்கி, பதவி உயர்வு பெற்றவர்களாகவே உள்ளனர். சிலர் தேர்தல் காலத்துக்கு வெளி மாவட்டங்களில் பணியாற்றியும் பின்னர் சொந்த மாவட்டத்துக்குத் திரும்பி வந்துள்ளனர்.
எனவே, சட்ட ஒழுங்கை நிலைநாட்டவும், முக்கிய குற்றவாளிகள் தப்பிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கவும், பொய்யான வழக்குகளை தடுக்கும் நோக்கில், சொந்த மாவட்டங்களில் பணிபுரியும் காவலர்களை இடமாற்றம் செய்து, வெளியிலிருந்து போலீசாரை நியமிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம். எஸ். சுப்பிரமணியம் மற்றும் எஸ். ஸ்ரீமதி அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது. மனுதாரரின் சார்பாக வழக்கறிஞர் ஆயிரம் கே. செல்வக்குமார் வாதிட்டார். உள்துறை செயலாளர், டிஜிபி மற்றும் குமரி மாவட்ட எஸ்பி ஆகியோரிடம் பதில் அறிக்கைகள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, விசாரணையை ஒத்திவைத்தது.