மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026 ஜனவரி முதல் தோப்பூரில் செயல்படும்…

0

2026 ஜனவரி தைப்பொங்கலிலிருந்து மதுரை தோப்பூரில் எயிம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படத் தொடங்கும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு!

மதுரை, தோப்பூரில் உருவாகி வரும் எயிம்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பற்றி முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் ஹனுமந்தராவ் தெரிவித்ததாவது:

“வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தைப்பொங்கல் பண்டிகையன்று, மதுரை தோப்பூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் ‘எயிம்ஸ்’ மருத்துவக் கல்லூரி செயல்படத் தொடங்கும்,” என்றார்.

தோப்பூரில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. சமீபத்தில் மருத்துவமனை கட்டிடத்தின் 3D வடிவமைப்பு வீடியோ வெளியானது, இது பொதுமக்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ‘எயிம்ஸ்’ மருத்துவக் கல்லூரி, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இக்கல்லூரியை மதுரைக்கு மாற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், மதுரை எயிம்ஸ் தலைவர் பிரசாந்த் லவானியா தலைமையில், வெள்ளிக்கிழமை ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாக அதிகாரி ஹனுமந்தராவ், எம்பிக்கள் மாணிக் தாகூர் (விருதுநகர்), ராணி ஸ்ரீகுமார் (தென்காசி), சந்திரசேகரன் (அதிமுக – ராஜ்யசபா) ஆகியோர் கலந்து கொண்டனர். மத்திய துணைச் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் 8 பேர் ஆன்லைன் மூலம் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், மருத்துவமனை கட்டுமானத் திட்டங்கள், கல்லூரி நிர்வாகம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஹனுமந்தராவ், “எயிம்ஸ் மாணவர்கள் தற்போது ராமநாதபுரத்தில் கல்வி பயின்றுவருகின்றனர். ஆனால், அங்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால், புதிய வளாகத்துக்கான கட்டிடங்கள் மதுரையில் தயாராகின்றன. தற்போது மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவரும் நிலையில் உள்ளது. இதனால், 2026 தைப்பொங்கல் முதல் கல்லூரி தோப்பூரில் இயங்கும்.

மாணவர்களுக்கான விடுதி, ஆய்வகங்கள், ஆரம்பத்திலேயே 150 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்படும். மேலும், 2027க்குள் முழு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, இயங்கத் தொடங்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் கட்டுமானத்தின் முன்னேற்றத்தைப் பற்றிய புகைப்படங்களை வெளியிட உத்தரவிடப்பட்டிருக்கிறது,” என்றார்.

Facebook Comments Box