ஜூலை 7ஆம் தேதி ஒரு சுப முகூர்த்த நாளாக இருப்பதால், அந்த நாளில் பத்திரப் பதிவு செய்வதற்கான கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என பதிவுத்துறை தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு: சுப முகூர்த்த நாட்களில் பொதுவாக பத்திரப் பதிவு எண்ணிக்கை அதிகமாகும். இதனால், அந்த நாட்களில் பதிவு செய்ய விரும்பும் மக்களுக்கு வசதியாக அதிக எண்ணிக்கையிலான முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும். தற்போதைய ஆனி மாதத்தில் ஜூலை 7ஆம் தேதி சுப தினமாக இருப்பதால், அந்த நாளில் கூடுதல் டோக்கன்கள் வழங்க வேண்டும் என பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதனை முன்னிட்டு, ஜூலை 7ஆம் தேதி ஒரே சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில் வழக்கமான 100 டோக்கன்களுக்கு பதிலாக 150 டோக்கன்கள், இரண்டு சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 டோக்கன்கள் வழங்கப்படும். மேலும், அதிக பத்திரப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களில் வழக்கமான 100 டோக்கன்களுக்கு மேலாக 150 சாதாரண டோக்கன்கள் மற்றும் தற்போது வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுக்கு மேலாக 4 கூடுதல் தட்கல் டோக்கன்களும் பொது மக்களுக்காக வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.