மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு – திறப்பளவு 30,000 கன அடியாக உயர்வு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 18,615 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 19,286 கன அடியாகவும், பிற்பகலில் 24,735 கன அடியாகவும், மாலை நேரத்தில் 29,423 கன அடியாகவும் அதிகரித்தது.
இந்த சூழ்நிலையில், மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு நேற்று காலை 10 மணி முதல் விநாடிக்கு 24,000 கன அடியில் இருந்து 30,000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வாயிலாக விநாடிக்கு 22,100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதேசமயம், 16 கண் மதகு வழியாக 7,900 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் விடப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் நேற்று 119.63 அடியாக இருந்தது. இதில் நீர் இருப்பு 92.88 டி.எம்.சி ஆகக் கணிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில், காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் 20,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 28,000 கனஅடியாகவும், இரவு 50,000 கனஅடியாகவும் உயர்ந்தது. இந்த நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக, ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கத்தையும் தடைசெய்யும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு தொடர்ச்சியாக நடைமுறையில் உள்ளது.