மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வரிடம் தொழில் அமைப்புகள் வலியுறுத்தல்

0

மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வரிடம் தொழில் அமைப்புகள் வலியுறுத்தல்

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

கோவையில் உள்ள ‘கொடிசியா’ அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ‘கொடிசியா’ தலைவர் கார்த்திகேயன், இந்திய தொழில் வர்த்தக சபை (கோவை) தலைவர் ராஜேஷ் லுந்த், ‘டீகா’ தலைவர் பிரதீப், டான்சியா துணைத் தலைவர் சுருளிவேல், டாக்ட் தலைவர் ஜேம்ஸ், காட்மா தலைவர் சிவக்குமார், லகு உத்யோக் பாரதி மாநில பொதுச் செயலாளர் கல்யாணசுந்தரம், கொசிமா தலைவர் நடராஜன், சிஐஏ தலைவர் தேவகுமார், கிரில் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ரவி மற்றும் காஸ்மாபேன் தலைவர் சிவசண்முக குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அவர்கள் கூறியதாவது:

தமிழக அரசு ஜூலை 1-ஆம் தேதி முதல் 3.16 சதவீத மின்கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளது. இதன் தாக்கம் தொழில்துறையை மிகவும் மோசமாக பாதித்துள்ளது. இதனையடுத்து, கோவையில் உள்ள 50 தொழில் அமைப்புகள் மற்றும் மாவட்ட அளவிலான 35 அமைப்புகளுடன் கலந்தாலோசனை நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டங்களில் கலந்து கொண்ட கோவைப் பகுதியைச் சேர்ந்த 34 அமைப்புகள் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 21 அமைப்புகள், உயர்வை மீளப் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீர்மானித்துள்ளன.

முன்பும், 2022-ஆம் ஆண்டு மின்கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது. குறிப்பாக நிலைக்கட்டணம் (மாதம் மின்சாரம் பயன்படுத்தினாலும், பயன்படுத்தாவிட்டாலும் செலுத்த வேண்டிய கட்டணம்) 4.30 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இதனால் ஏற்கெனவே நெருக்கடியில் இருந்த தொழில்துறைக்கு மேலும் சுமை ஏற்பட்டது.

தொடர்ந்து ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வுகள் நடைமுறைக்கு வருவது தொழில்துறைக்கு கடும் சவாலாக உள்ளது. 2022-ஆம் ஆண்டு மட்டுமே 5 சதவீத தொழில்கள் மூடப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 சதவீதம் தொழில்கள், உயர்ந்த மின்கட்டணத்தின் காரணமாக இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

மேற்கூரை சூரிய சக்தி மூலம் நாங்களே உற்பத்தி செய்து நாங்களே பயன்படுத்தும் மின்சாரத்திற்கே “நெட்வொர்க் கட்டணம்” வசூலிக்கப்படுகிறது. இது உரியதல்ல. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிறுவனங்களுக்கு மட்டும் விலக்கு வழங்கப்படுவதும் சமச்சீர் அல்ல. இது போல் அனைத்து நிறுவனங்களுக்கும் கட்டமைப்புக் கட்டணத்தில் விலக்கு வழங்கப்பட வேண்டும்.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தொழில்துறை அமைப்புகள் முன்வைத்துள்ள நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Facebook Comments Box