மூத்த தமிழறிஞர் வா.மு.சேதுராமன் காலமானார் – தலைவர்கள் அஞ்சலி
பெருங்கவிக்கோ, செந்தமிழ் கவிமணி பட்டங்களை பெற்ற, மூத்த தமிழறிஞர் வா.மு.சேதுராமன் (91) உடல்நலக்குறைவால் சென்னையில் மறைந்தார். ராமநாதபுரம் மாவட்டம் ஆண்டநாயகபுரத்தில் 1935ஆம் ஆண்டு பிறந்த இவர், சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். விருகம்பாக்கம் சின்மயா நகரில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அவரது பிள்ளைகள் திருவள்ளுவர், கவியரசன், ஆண்டவர், தமிழ் மணிகண்டன் மற்றும் பூங்கொடி.
வா.மு.சேதுராமன், நெஞ்சத்தோட்டம், ஐயப்பன் பாமாலை, தமிழ் முழக்கம், சேது காப்பியம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் பதிப்பித்துள்ள இவர், பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தை நிறுவினார். திருவள்ளுவர் விருது, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளதுடன், உலகத் தமிழரின் ஒற்றுமைக்காக ஏழு பன்னாட்டு மாநாடுகளையும் நடத்தியுள்ளார்.
அரச மரியாதையுடன் இறுதிச் சடங்கு
முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி காவல் துறை மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்கு விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. சின்மயா நகரிலுள்ள பெருங்கவிக்கோ தமிழ்க்கோட்டத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது. முதல்வர் ஸ்டாலின் உட்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அறிஞரின் மரணத்திற்கு தலைவர்கள் இரங்கல்
முதல்வர் ஸ்டாலின், “இன்றும் முரசொலியில் கவிதை எழுதிய அவர் இவ்வாறு மறைந்திருப்பதை ஏற்க இயலாது,” எனக் கூறி இரங்கல் தெரிவித்தார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக தலைவர் வைகோ, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் வாசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பலர், தமிழ் வளர்ச்சியில் அவரது பங்களிப்பை பாராட்டி, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.