ரூ.96 லட்ச மோசடி வழக்கில் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் கைது

0

ரூ.96 லட்ச மோசடி வழக்கில் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் கைது

கரூர்: ரூ.96 லட்சம் மோசடி தொடர்பாக, அதிமுகவின் தூத்துக்குடி மாவட்ட விவசாய அணி முன்னாள் தலைவரும், கரூர் ஊராட்சி ஒன்றியக் குழுவின் முன்னாள் தலைவருமான பாலமுருகன் (வயது 52) நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த பிரின்ஸ் கிப்ஸன் என்பவர், கரூர் அருகே உள்ள கோதூரில் 7 ஏக்கர் நிலம் வாங்குவதற்காக, நிலத் தரகர் ஆர்.எஸ். ராஜாவிடம் முன்பணமாக ரூ.96 லட்சம் வழங்கினார். ஆனால், நிலம் வாங்கும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டதால், அந்த நில உரிமையாளர்கள் நிலத்தை மற்றொரு நபருக்கு விற்றுவிட்டனர். அதன் பின்னர், ஆர்.எஸ். ராஜா அந்த தொகையை மீண்டும் பிரின்ஸ் கிப்ஸனிடம் திருப்பிக் கொடுத்தார்.

இந்நிலையில், பிரின்ஸ் கிப்ஸன் நிலத்தை வாங்க வேண்டும் என்பதற்காக வற்புறுத்திய போது, பாலமுருகன் இந்த விவகாரத்தை தீர்த்துவைப்பதாக கூறி, வழக்கறிஞர் ரகுநாதன் மூலமாக ஆர்.எஸ். ராஜாவிடம் இருந்து கடந்த ஆண்டு நவம்பரில் ரூ.96 லட்சத்தை பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த தொகையை பிரின்ஸ் கிப்ஸனிடம் வழங்காமல், பாலமுருகன் தனக்கே வைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, வழக்கறிஞர் ரகுநாதன் ரூ.96 லட்சத்தை திரும்பக் கேட்க, பாலமுருகன் வழங்க மறுத்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லாவிடம் வழக்கறிஞர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, பாலமுருகனை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நீதிபதி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Facebook Comments Box