விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி சம்பவத்தில், ஒருவருக்கு உயிரிழப்பு ஏற்பட்டதுடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
சிவகாசிக்கருகே திருத்தங்கலை பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான இந்த பட்டாசு உற்பத்தி மையம், சாத்தூர் அருகிலுள்ள கீழத்தாயில்பட்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமத்தின் கீழ் இயங்கும் இத்தொழிற்சாலையில், பேன்சி வகை பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இதில் 50க்கு மேற்பட்ட பிரிவுகளில், 100க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலையில் ஏற்பட்ட வெடிச்சம்பவத்தில் 15க்கும் மேலான அறைகள் முழுமையாக சிதைந்து தரைமட்டமானது. ஆரம்பகட்ட விசாரணையின் பேரில், வெடிமருந்து தயாரிக்கும் நேரத்தில் ஏற்பட்ட உராய்வால் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிய வந்துள்ளது. இதில், பனையடிப்பட்டியைச் சேர்ந்த பாலகுருசாமி என்பவர் உயிரிழந்தார். மேலும், 5 தொழிலாளர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
உயிரிழந்த பாலகுருசாமியின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. காயமடைந்தவர்களும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் பணிக்குத் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.