உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள்: வீடு வீடாக விண்ணப்ப விநியோக பணி நாளை சென்னையில் தொடக்கம்

0

“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள்: வீடு வீடாக விண்ணப்ப விநியோக பணி நாளை சென்னையில் தொடக்கம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் படி, “உங்களுடன் ஸ்டாலின்” என்ற தமிழக முதல்வரின் மக்கள் தொடர்பு திட்டத்தின் முதற்கட்ட முகாமை முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், ஜூலை 15, 2025 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார். இந்த மக்கள்சேவை முகாம்கள் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நடக்கவிருக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக, சென்னையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியில், ஜூலை 15ம் தேதி முதல் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் செயல்பட தொடங்கவுள்ளன. முதற்கட்டமாக அதே நாளில், மாதவரம் மண்டலத்தின் வார்டு-25, தண்டையார்பேட்டை மண்டலத்தின் வார்டு-38, திரு.வி.க நகர் மண்டலத்தின் வார்டு-76, தேனாம்பேட்டை மண்டலத்தின் வார்டு-109, வளசரவாக்கம் மண்டலத்தின் வார்டு-143 மற்றும் அடையாறு மண்டலத்தின் வார்டு-168 என மொத்தம் 6 வார்டுகளில் இந்த முகாம்கள் தொடங்கவுள்ளன.

இதனையொட்டி, இந்த 6 வார்டுகளில் நாளை (ஜூலை 7, 2025) முதல் தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று மக்கள் மத்தியில் திட்டம் குறித்த தகவல்களையும், விண்ணப்ப படிவங்களையும் வழங்கும் பணி தொடங்குகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளையும் உள்ளடக்கிய வகையில், தினமும் சராசரியாக 6 வார்டுகளில் இந்த முகாம்கள் நடத்தப்படும். ஒவ்வொரு வார்டிலும் இருமுறை இந்த முகாம்கள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளன. எனவே, 15.07.2025 முதல் 31.10.2025 வரை மொத்தம் 400 முகாம்கள் நடத்தப்படும்.

இதற்காக சுமார் 2000 தன்னார்வலர்கள் மக்கள் இடையே செல்கின்றனர். அவர்கள் முகாம்கள் தொடர்பான முழுமையான தகவல்களையும், விண்ணப்ப படிவங்களையும் வழங்கி, மக்களுக்கு பயன்படும் விதமாக அரசின் சேவைகள் குறித்து விளக்கவுள்ளனர்.

முகாம்களின் முதற்கட்டம், 15.07.2025 முதல் 14.08.2025 வரை நடைபெறவுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 1 முதல் 15 வரை உள்ள 200 வார்டுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 109 வார்டுகளில் இந்த முகாம்கள் நடைபெறும். ஒவ்வொரு முகாமும் நடக்கும் 7 நாட்களுக்கு முன்னதாக, தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு தகவல் அளிப்பதும், விண்ணப்பங்கள் வழங்குவதும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முகாம்களில் நடைபெறும் செயல்பாடுகள் தொடர்பாக — எந்த நாளில், எந்த இடத்தில் முகாம் நடக்கிறது, என்னென்ன சேவைகள் வழங்கப்படும், எந்தெந்த ஆவணங்கள் தேவை, யார் தகுதியுடையவர்கள் என்பன உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பொதுமக்களுக்கு தெளிவாக தெரிவிக்கப்படும். மொத்தமாக 13 அரசுத்துறைகள் சார்ந்த 43 சேவைகள் இந்த முகாம்களில் வழங்கப்படும்.

மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள ஆனாலும் விண்ணப்பிக்க தவறிய பெண்கள், இந்த முகாம்களில் நேரில் வருகை தரி தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இந்த திட்டத்திற்கு விண்ணப்பங்கள் மட்டும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் மட்டுமே பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களின் நலனுக்காக, இம்முகாம்களில் மருத்துவ வசதிகளும் வழங்கப்பட உள்ளன. உடல்நல பரிசோதனை, ஆலோசனை உள்ளிட்ட மருத்துவ முகாம்களும் ஒருங்கிணைக்கப்படும்.

மொத்தத்தில், இந்த திட்டம் மூன்று மாதங்கள் தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் இந்த முகாம்களில், அந்தந்த வார்டில் உள்ள மக்கள் தவறாமல் கலந்து கொண்டு அரசின் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்கொள்கிறது.

Facebook Comments Box