பாகிஸ்தானில் தாலிபான்கள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு; பலர் காயம்
பாகிஸ்தானில், தாலிபான் இயக்கம் மேற்கொண்ட தற்கொலைவெடி தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர், மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
2021-இல் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு பாகிஸ்தானில் தாலிபான் தீவிரவாதத் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. இந்த தாக்குதல்களில் பாகிஸ்தான் தாலிபான் எனப்படும் ஒரு பிரிவே அதிகமாக ஈடுபட்டுவருகிறது.
அண்மையில், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய கைபர் பக்துன்வா மாகாணத்தின் வடக்குப் பகுதியில் உள்ள வஜீரிஸ்தான் மாவட்டத்தில் ராணுவ வாகனங்கள் சென்றுகொண்டிருந்தபோது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனமொன்றை தற்கொலைப்படை தீவிரவாதி மோதச் செய்தான். இந்த தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பொதுமக்கள், காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஒரு செய்தியாளரிடம் பேசிய, பெயர் குறிப்பிட விரும்பாத அரசு அதிகாரி ஒருவர், “இந்த தற்கொலை தாக்குதல் கடந்த ஒன்றை விட அதிக பேரை பலிகொண்டுள்ளது; அப்போது 13 பேர் உயிரிழந்தனர், தற்போது எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது” என்றார்.
மேலும், இந்த தாக்குதலில் இரண்டு வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்ததால் ஆறு சிறுவர் காயமடைந்ததாக மாவட்ட காவல் அதிகாரி கூறினார். இந்த தாக்குதலுக்கு ஹபீஸ் குல் பகதூர் என்ற ஆயுதக் குழுவின் தற்கொலைப் படை பிரிவு பொறுப்பேற்றுள்ளது.
இதேபோல், கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் பகுதிகளில் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இத்தகைய தீவிரவாதத் தாக்குதல்களில் சுமார் 290 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் பெரும்பாலானோர் பாதுகாப்புப் படையினரே எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.