டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு, அந்நாட்டில் சட்டவிரோதமாக வசித்து வந்த வெளிநாட்டவர்களை தாய்நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையை அவர் தீவிரமாக மேற்கொண்டார்.
இந்தத் திட்டத்தின் கீழ், இந்தியர் பலரும் ராணுவ விமானங்கள் மூலம் நாடு திருப்பி அனுப்பப்பட்டனர். இதேபோல், அமெரிக்காவிற்குள் குடியேறும் விதிகளும் கடுமைப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக, அமெரிக்கா செல்லும் வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
முக்கியமாக, இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா சென்றவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 70 சதவீதம் குறைந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முன்பு, சட்டவிரோதமாக அமெரிக்கா சென்றவர்கள் முதலில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டு, பிறகு சில நிபந்தனைகளுடன் அமெரிக்காவில் தங்க அனுமதி வழங்கப்பட்டுவந்தது. ஆனால், அதிபர் ட்ரம்ப் அந்த நடைமுறையை ரத்து செய்துவிட்டார்.
இதன் விளைவாக, கடந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை ஜோ பைடன் தலைமையிலான காலகட்டத்தில் 34,535 இந்தியர்கள் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக சென்றிருந்தனர். ஆனால் தற்போது, ட்ரம்ப் மீண்டும் பதவி ஏற்ற பிறகு, அந்த எண்ணிக்கை 10,382 ஆக குறைந்துள்ளது.
அவர்கள் பெரும்பாலும் “அமெரிக்க கனவுகள்” என்பதற்காக உயிரைப் பணயமாக வைத்து பயணித்தவர்கள். இந்த சட்டவிரோத குடியேற்றத்தில் 18 வயதுக்கு குறைவான 30 குழந்தைகள் இருப்பதும், அவர்களில் பெரும்பாலானோர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விவரங்களை அமெரிக்காவின் குடியேற்றம் மற்றும் எல்லை பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.