உக்ரைனுடன் நடைபெறும் யுத்தத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முடிப்பார் என்று நினைக்க முடியவில்லை என்றும், அவரிடம் தான் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் பிரச்சாரத்தின்போது, “நான் மீண்டும் பதவிக்கு வந்தால் உக்ரைன் – ரஷ்யா போருக்கு உடனடியாக முடிவை காண்பேன்,” என்று அவர் உறுதியளித்திருந்தார்.
இப்போது, டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்று ஆறுமாதத்தைக் கடந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதல் இன்னும் தொடர்ந்துவருகிறது.
இந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக டொனால்ட் ட்ரம்ப், விளாடிமிர் புதினுடன் ஐந்து முறை தொலைபேசியில் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
ஒவ்வொரு உரையாடலுக்குப் பிறகும் நம்பிக்கையுடன் பேசிய ட்ரம்ப், கடந்த வியாழக்கிழமை நடந்த உரையாடலுக்கு பிறகு முதல்முறையாக ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜூலை 4-ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “நாங்கள் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசினோம். அந்த உரையாடலில் ஈரானைச் சேர்ந்த பல விஷயங்களும், உக்ரைன் தொடர்பான சந்திப்புகளும் இடம்பெற்றன. ஆனால், போரை முடிவுக்குக் கொண்டு வர முயன்றும் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லையே. இதனால் எனக்கு வருத்தமாக இருக்கிறது. விளாடிமிர் புதின் தொடர்பாக நான் ஏமாற்றமடைந்துள்ளேன். உக்ரைன் மீது நடக்கும் போரை அவர் நிறுத்துவார் என்று எனக்குத் தோன்றவில்லை,” என தெரிவித்துள்ளார்.