விண்வெளியில் பூமியை 113 முறை சுற்றி வர திட்டம்: ஷுபன்ஷு சுக்லா 50 லட்சம் கி.மீ. பயணம்

0

இந்திய விண்வெளி வீரரும் கேப்டனுமான ஷுபன்ஷு சுக்லா, விண்வெளியில் சுமார் 50 லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளார். கடந்த மாதம் 25-ஆம் தேதி, அமெரிக்காவின் நாசா அமைப்பின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து டிராகன் விண்கலம், பால்கன் 9 ராக்கெட்டின் உதவியுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி அனுப்பப்பட்டது.

இந்த பயணத்தில், இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உட்பட நால்வர், 14 நாட்கள் நீடிக்கும் அறிவியல் ஆராய்ச்சி பணிக்காக அந்த விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர். அங்கு, பயிர்கள் வளர்ப்பது போன்ற ஏழு முக்கியமான ஆய்வுகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில், ஷுபன்ஷு சுக்லா காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடினார்.

மேலும் நேற்று மாலை 3.47 மணியளவில், ஹாம் ரேடியோ என்ற வணிகரீதியற்ற வானொலி சேவையின் மூலம், சுக்லா, பள்ளி மாணவர்கள் மற்றும் இஸ்ரோவின் விஞ்ஞானிகளுடன் பெங்களூருவிலுள்ள யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்துடன் கலந்துரையாடினார். கடந்த 10 நாட்களில் மட்டும் அவர் 50 லட்சம் கி.மீ-க்கும் அதிகமாக விண்வெளியில் பயணித்துள்ளார்.

இந்த பயணம் நிறைவடையும் போது, சுக்லா மற்றும் அவரது குழுவினர் பூமியை சுமார் 113 முறை சுற்றி வந்திருப்பார்கள். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறும்போது, “40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா சார்பாக விண்வெளிக்கு சென்ற முதலாவது மனிதர் சுக்லா. அவர் உயிரியல், புவியியல் மற்றும் பொருள் அறிவியல் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட உலகளாவிய ஆராய்ச்சிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்துள்ளார்” என்று தெரிவித்தார்.

இந்த பயணத்தில், சுக்லாவுடன் முன்னாள் நாசா வீரர் பெக்கி விட்சன், போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்நான்ஸ்கி மற்றும் ஹங்கேரியைச் சேர்ந்த டிபோர் காப்பும் கலந்து கொண்டனர்.

Facebook Comments Box